குடிக்காமலும் லிவர் கெடலாம் தெரியுமா?

கல்லீரல். அதாவது லிவர் பாதித்தது என்றால், அதிகமாக மது குடித்ததுதான் காரணம் என்று பலர் நம்புகிறோம்.


அப்படி இல்லை.


மதுவை தொடாதவர்களுக்கும் லிவர் பிரச்னை வரலாம். வருகிறது. லிவர் வீங்கி விடும். ரொம்ப பெரிதாக. மது அருந்தும் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் லிவர் வீக்கத்தை நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் டிசீஸ் என்பார்கள் டாக்டர்கள். சுருக்கமாக NAFLD.


இந்தியாவில் இந்த லிவர் நோயால் 32 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஷாக் கொடுக்கிறது ஓர் ஆய்வு.


அடுத்த ஷாக்: இந்த 32 கம்மியாக இருக்கலாம்; ஏன் என்றால், ஈரலில் கொழுப்பு சேர்ந்ததால் அது பெரிதாக வீங்கி கிடக்கிறது என்பது நிறைய பேருக்கு தெரியவே தெரியாதாம்.


பொதுவாக இந்த நோய் பாதித்தவர்கள் குண்டாக அல்லது தொப்பை மட்டும் பெரிதாக தெரிவார்கள். ஆனால், ஒல்லியாக இருப்பவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுவது சகஜம் என்கின்றனர் டாக்டர்கள்.


Pb2+ என்று விஞ்ஞானிகளால் குறிப்பிடப்படும் ஈய உப்பு இந்த விஷயத்தில் வில்லனாக செயல்படுவதை மண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மண்டி ஐஐடி இருக்குமிடம் இமாச்சல பிரதேஷ்.


லக்னோவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டாக்சிகாலஜி ரீசர்ச் நிறுவனமும், டெல்லியில் உள்ள ஸ்கூல் ஆஃப் கெமிக்கல் அண்ட் லைஃப் சயின்சஸ் நிறுவனமும் சேர்ந்து இந்த ஆய்வை நடத்தின. FEBS Letters என்ற சஞ்சிகையில் அதன் முடிவுகள் பிரசுரம் ஆகியுள்ளன.


பல நாடுகளில் ஈயம் ( அல்லது காரீயம்) பயன்பாடு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. நமது நாட்டில் பெயின்ட், பூச்சி மருந்து, பேக்கேஜிங் மெட்டீரியல், பீர் பானம் என்று பல வழிகளில் ஈயம் நம்மோடு ஒட்டி உறவாடுகிறது.  உப்பு மாதிரி தெரிவதாலோ என்னவோ அதை ஈய உப்பு என்கிறார்கள்.


மனித உடலுக்குள் இருக்கும் எந்த உறுப்பில் வேண்டுமானாலும் இந்த ஈயம் இடம் பிடித்து தங்க முடியும். ஆனால், ஈரல் ரொம்பவும் தாராளமாக ஈயத்துக்கு இடம் கொடுக்கிறது. இதனால், ஒருவர் உடலில் தேங்கும் மொத்த ஈயத்தில் 3 ல் ஒரு பகுதி ஈரலில் குடியேறுகிறது.


இதுதான் லிவரை ஆபத்துக்கு தள்ளுகிறது. பொதுவாக லிவர் தன்னைத் தானே பராமரித்துக் கொள்வதில் கில்லாடி. என்றாலும் அவுட்சைட் அட்டாக்கை எவ்வளவுதான் தாங்க முடியும்?


ஈரல் மாற்று அறுவை சிகிச்சை எல்லோருக்கும் சாத்தியம் அல்ல.