இதற்கும் விதிகள் உண்டு

மருந்து மாத்திரைகள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்கிற நிலை வந்தால், கீழ்காணும் சில விதிமுறைகளை பின்பற்றினால் தவறில்லையே?


மருத்துவ கழகத்தில் பதிவு செய்த தகுதியான டாக்டரால் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அவரால் எழுதி தரப்பட்ட மருந்து சீட்டை காட்டியே கடையில் மருந்து மாத்திரை வாங்க வேண்டும்.


வாங்கும் போதே கடைக்காரர் தரும் மருந்து பெயரும், டாக்டர் எழுதி கொடுத்த மருந்து சீட்டு பெயரும் ஒன்றாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதோடு அந்த மருந்து தயாரிக்கப்பட்ட நாள், உபயோகிக்கக்கூடிய கால அளவு (காலாவதி ஆகும் நாள் - மாதம் – வருடம்) மருந்து பாட்டில் மீதோ மாத்திரை இருக்கும் ஜரிகை அட்டை மீதோ அச்சிடப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.


வாங்கி வந்த மருந்துகளை பாதுகாப்பாக - அதிக சூரிய வெளிச்சம், தண்ணீர், காற்று படாத இடத்தில், குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும்.


சாதாரண தலைவலி, உடல்வலி, சளி, இருமல், வாயு தொல்லை என்று நீங்களாகவே முடிவு செய்து டீவி அல்லது பத்திரிகை விளம்பரங்களை பார்த்து மாத்திரை வாங்கி சாப்பிடாதீர்கள். (அதைவிட பாட்டி வைத்தியம் சமயத்தில் கை கொடுக்கும்)


சாப்பிட வேண்டிய மாத்திரை அளவு - முறை - நேரம் இவையெல்லாம் டாக்டர் சொன்ன அறிவுரைபடிதான் இருக்க வேண்டும். விரைவில் குணமாக வேண்டும் என்று ஒரு வாரத்துக்கு கொடுத்த மருந்துகளை 2, 3 நாட்களில் தீர்க்க கூடாது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் உட்கொண்டால் பக்க விளைவு நிச்சயம்.


உங்களுக்கு வாங்கிய மருந்துகள் உங்களுக்கு மட்டும்தான். நீங்களே டாக்டராகி, அதை அடுத்தவருக்கு சிபாரிசு செய்ய வேண்டாம்.


மருந்துகள் சாப்பிட்டும் பூரண குணம் இல்லை என்றால், முன்பு பார்த்த அதே டாக்டரிடம் செல்ல வேண்டும். மருந்தின் அளவு அல்லது வேறு மருந்து எழுதி தருவார். அலைச்சலுக்கும் ஃபீசுக்கும் பயந்து பழைய சீட்டை கடையில் கொடுத்து அந்த மருந்தையே திரும்ப வாங்கி சாப்பிட வேண்டாம்.


ஊசி, களிம்பு, கிரீம் எதுவானாலும் பயன்படுத்த ஆரம்பித்ததுமே ஏதாவது உடலில் மாற்றம் நேர்ந்தால் ஒவ்வாமையாக (அலர்ஜி) இருக்கலாம். உடனே டாக்டரை பார்க்க வேண்டும். ஒவ்வாமைதான் என அவர் ஊர்ஜிதம் செய்தால் அந்த மருந்தின் பெயரை குறித்து வைக்கலாம். பின்னாளில் உதவும்.


வாழ்நாள் முழுதும் மருந்துகள் உதவியோடுதான் வாழவேண்டும் என்கிற நிலையில் உள்ளவர்கள், மனநலம் குன்றியவர்கள் ஆகியோரிடம் மாத்திரைகளை மொத்தமாக கொடுத்து வைக்கக் கூடாது. அந்தந்த வேளைக்கு உரியதை மட்டும் கொடுத்து, சரியாக சாப்பிடுகிறார்களா என்று கவனிக்க வேண்டும்.


மாத்திரை அட்டை அல்லது குப்பியின் மீதுள்ள பெயர், லேபிள், தேதி அழிந்து இருந்தால், உறுதியாக என்ன மருந்து? எப்போது காலாவதி என்று தெரியாமல் சாப்பிட வேண்டாம். செலவை பார்க்காமல் புதிதாக வாங்கி பயன்படுத்தலாம்.


மீதம் உள்ள மருந்து குப்பி அல்லது காலாவதியான மாத்திரைகளை அப்படியே குப்பையில் தூக்கி போடாமல், மாத்திரை, கேப்சூல் என்றால் பொடி செய்தும், சிதைத்தும், குப்பியில் மீதம் உள்ளதை கழிவு நீர் பாதை (சாக்கடை) அல்லது குழாயடியில் கொட்டி, தண்ணீர் விட்டு காலி செய்த பிறகே குப்பையில் போடவும்.